Saturday, November 12, 2022

Purple-rumped Sunbird


கோடை முடிந்து வாடைக் காற்று வீசத் தொடங்கியதிலிருந்து இருள் பிரியாத அதிகாலையில் என்னை எழுப்பி விடுவது வேப்ப மரத்து வீட்டில் தங்கியிருக்கும் வால் நீண்ட கருங்குருவி தான். அதன் பாடல் கொஞ்சம் கரடு முரடாக இருந்தாலும் அந்த வேளைக்கு அதுவும் இசைவாகத்தான் இருக்கும். அப்பவும் எழ சோம்பல் பட்டால் இருக்கவே இருக்கிறது காக்கா. அலறியடித்து எழ வைத்து விடும்.

இன்று காலையில் 'டிட்டிட்' 'டிட்டிட்' என மாறாத லயத்துடன் ஒரு சன்னக் குரல்.. எங்கேயோ கேட்ட குரல்.. யோசனையுடன் சன்னல் வழியாகக் கீழே பார்த்தேன்.. முதல் மாடியை எட்டிப் பிடித்திருந்த செண்பக மரத்தின் அடிக் கிளையிலிருந்து தான் சப்தம் வந்து கொண்டிருந்தது.. கீழே அப்பாவின் அறைக்கு ஓடினேன்(அங்குள்ள சன்னலுக்கு வெளியே தான் அந்தக் கிளை இருந்தது).. 'அட! இரு மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் கூடு கட்டிக் குஞ்சு பொரித்த அதே பறவை ! '.. திரும்பவும் இப்போது வந்திருக்கிறது.. அதே பறவையா அல்லது அதே இனத்தைச் சார்ந்த வேறொன்றா எனத் தெரியவில்லை.


மார்ச் மாதத்தில் இதே மரத்தில் தான் இந்தப் பறவையையும், பாதி கட்டி முடிக்கப் பட்ட அதன் கூட்டையும் பார்த்தேன். ஆவல் மிகுந்து அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கினேன் (சன்னலில் பேப்பர் ஒட்டி ஒரு சிறு துவாரம் வழியாக). செண்பக மரத்தின் அடிக் கிளை நுனியில், சன்னலிலிருந்து நான்கு அடித் தொலைவில் இருந்தது அக்கூடு. அடர் வண்ணத்தில் மேற்புறமும், மஞ்சள் நிறத்தில் அடிப்புறமும், கீழ் நோக்கி வளைந்த நீண்ட அலகும் கொண்டிருந்தது அந்தச் சின்னஞ்சிறு பறவை. அது பெண் பறவை போலும். நார், மண் போன்ற ஏதோ ஒரு பொருள், குச்சி, புல் என்று ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து கூட்டைக் கட்டிக் கொண்டிருந்தது(பாலித்தீன் துண்டொன்றையும் பயன்படுத்தியிருந்தது தான் கொடுமை ).

இன்னொரு பறவை(அனேகமாக ஆண் பறவையாக இருக்கலாம்) அதற்குத் துணையாகப் பறந்து வரும். அதன் தலைப் பகுதி நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் அடர்ந்து இருந்தது. அதுவும் அவ்வப்போது எதையாவது தூக்கி வரும். ஆனால் கூட்டைக் கட்டியது முழுக்கப் பெண் பறவை தான்.


இறுதியாகக் கொஞ்சம் பஞ்சுகளைக் கொண்டு வந்ததும் மெத்தென்ற வீடு தயாராகி விட்டது. அவை இரை தேடப் போகும் நேரங்களில் மட்டுமே கூட்டை எட்டிப் பார்க்க முடியும். 2, 3 நாட்களுக்குப் பிறகு பார்த்த போது வெளிறிய பச்சை நிறத்தில் 2 முட்டைகள் இருந்தது. அதன் பின்பு இரவும் பகலுமாக அடை காத்தது. காலையிலும் மாலையிலும் அவை இரை தேடச் செல்லும் போது மட்டுமே கூட்டுக்குள் எட்டிப் பார்க்க முடியும்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் 'கீச் 'கீச்' என்று சப்தம்.. பெண் பறவையைக் காணவில்லை.. மெல்ல வெளியே சென்று கூட்டிற்குள் எட்டிப் பார்த்தேன்.. அதற்குள் 'டிட்டிட்டூ' 'டிட்டிட்டூ' என அபயக் குரல்.. மரத்தின் மேலிருந்து ஆண்பறவை தான் அப்படி அலறியது. பெண்பறவை வரும் வரை காவல் போலும். அதற்கப்புறம் சன்னலில் பேப்பர் துவாரம் வழியாக மட்டுமே கண்காணிப்பைத் தொடர்ந்தேன்.


நான் பார்க்கும் போதெல்லாம் அந்தக் குஞ்சுகள் சொப்பு வாயைத் திறந்தபடி வாசலில் காத்திருக்கும். நாள் முழுக்க‌ அவைகளின் அம்மா புழு போன்ற எதையோ கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டிக் கொண்டேயிருக்கும். கூட்டிற்கு அருகில் நம்முடைய‌ அரவம் கேட்டால் போதும், அவைகளின் அப்பா அபயக் குரலெடுத்து விடுவார். அதிலும் சன்னல் துவாரம் வழியாகக் காமிரா லென்சைப் பார்த்துவிட்டால் அவ்வளவு தான்.. கத்திக் கூப்பாடு போட்டு விடும். இப்படியே இரண்டு வாரங்கள் கழிந்தது.. ஒரு மாலை நேரத்தில் பார்த்த போது கூடு காலியாக இருந்தது. அன்று காலையிலேயே பறக்கக் கற்றுக் கொண்டிருந்த குஞ்சுகளை விட்டு விட்டு அந்தப் பறவைகள் சென்று விட்டதாகவும், சில மணி நேரங்களில் அந்தக் குஞ்சுகளும் போய் விட்டன என்றும் அம்மா சொன்னார்.. நான் கொஞ்சம் தொந்தரவு தந்து விட்டேன் போலும், அதான் சொல்லிக் கொள்ளாமலேயே போய்விட்டன.

என்ன ஆச்சரியம் !!.. இரண்டு வாரங்களிலேயே தனி வாழ்க்கையை ஆரம்பித்து விட்டன அந்தக் குஞ்சுகள்.. நாம் தான் வாழ்நாள் முழுக்க வீட்டை முதுகில் சுமந்து கொண்டு.. மூன்று தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துக் கொண்டு.. குழந்தைகளின் வாழ்க்கையையும் நாமே வாழ்ந்து கொண்டு.. மனிதப் பிறவிக்கு மீட்சியே இல்லையா??

ம்ம்.. போகட்டும்.. சொல்ல வந்ததை விட்டு எங்கேயோ போய்விடுகிறேன் பாருங்கள்.. இப்போது மறுபடியும் அந்தப் பறவை வந்திருக்கிறது.. கூடு கட்ட வாகான இடம் தேடிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படியிருக்கும் பட்சத்தில் போன தடவை மாதிரி அதற்குத் தொந்தரவு தரக் கூடாது. அதற்கு முன்பு அதன் பெயரைத் தெரிந்து கொள்ள கூகிளில் தேடியதில் ' Purple-rumped Sunbird ' என்று தெரிய வ‌ந்தது.. யாராவது இதன் தமிழ்ப்பெயர் தெரிந்தால் சொல்லுங்களேன் !

  © Blogger templates Brooklyn by Ourblogtemplates.com 2008

Back to TOP